AhlulBayt News Agency (ABNA):
இஸ்லாமிய சமுதாயத்தின் அடிப்படைகளை சீரிய வடிவில் காட்டித் தரும் ஹஜ் - இமாம் செய்யது அலீ காமெனெயி விடுத்துள்ள ஹஜ் செய்தி - 2019
ஆன்மீகத் தலைவர் இமாம் செய்யது அலீ காமெனெயி
விடுத்துள்ள ஹஜ் செய்தி - 2019
அருளாளன் கருணையாளன் அல்லாஹ் பெயர் போற்றி.
புகழ் அனைத்தும் அகிலங்களின் இரட்சகனுக்கே உரியது.
மாட்சிமையுரியவரும் நம்பிக்கைக்கு உரியவருமான இறுதி நபியும் ஆகிய அவனது தூதர் முஹம்மது நபிகளார் மீதும் அவரதுபுனித குடும்பத்தினர் மீதும் குறிப்பாக அண்டங்களில் அவனது அத்தாட்சியாய் உள்ளவர் மற்றும் கண்ணியமிக்க நபித் தோழர்கள் அடங்கலாக இறுதி நாள் வரை அன்னோரைநெறியோடு பின்பற்றியோர் மீதும் அல்லாஹ்வின் ஆசீர்வாதம் பொழிவதாக.
ஒவ்வொரு வருடமும் ஹஜ் இஸ்லாமிய உம்மத் மீதான படைப்பாளனின் அருள்மழை பொழிகின்ற காலம் ஆகும். ‘ஹஜ்ஜுக்கு மக்களிடம் அழைப்பு விடுங்கள்’ என்ற குர்ஆனின் அழைப்பு வரலாறு பூராகவும் இந்த இறையருளின் பொக்கிஷங்களை அடைந்து கொள்வதற்கான நித்திய அழைப்பாகும். இறைவனை ஆசிக்கும் உள்ளங்களும் உடல்களும் மற்றும் அவர்களது சிந்தனைகளும் நோக்குகளும் அதனால் பயனடையலாம். அதன் மூலம் ஆண்டு தோறும் ஒரு மக்கள் கூட்டம் ஹஜ்ஜின் மூலம் பாடங்களும் கற்பிதங்களும் உலகெங்கும் சென்றடைகின்றது.
ஹஜ்ஜில் இறைவனுக்கு அடிபணிதலினதும் தியானத்தினதும் அமுதம் கிடைக்கிறது. இதுவே சமுதாயத்தினதும் தனிமனிதனதும் பண்பாட்டுக்கும் மேம்பாட்டுக்கும் உயர்வுக்கும் அடிப்படையான அம்சமாகும். ஒரே உம்மத் என்பதைப் பறைசாற்றும் அடையாளமாக விளங்கும் மாபெரும் ஐக்கிய ஒன்று கூடலின் போது இது பெறப்படுகிறது. தனியான ஓர் அச்சைச் சுற்றி வலம் வருவதும் பொதுவான குறிக்கோளுடனான ஒருமைப் பட்ட ஒரு பயணத்தில் செல்வதும் இறை ஏகத்துவத்தின் அத்திவாரத்தின் மீது உம்மத் இயங்குவதையும் முயற்சி செய்வதையும் சுட்டி நிற்கின்றது.
ஹஜ்ஜை நிறைவேற்றுவோர் மத்தியில் காணப்படும் சமத்துவம், வேறுபாடின்மை என்பன எம் மத்தியில் உள்ள வேற்றுமைகள் களையப்பட்டு சந்தர்ப்பங்கள் சரிசமமாகபொதுமைப் படுத்துவதற்கு அடையாளமாகும்.
இவை அனைத்தும் இஸ்லாமிய சமுதாயத்தின் அடிப்படைகளை மிகச் சீரிய வடிவில் காட்டித் தருகின்றன. ஹஜ்ஜின் கிரியைகளில் அடங்கியுள்ள இஹ்ராம், தவாப், சஈ, தரித்தல், ரம்யு, நகர்தல், தரித்தல் போன்ற ஒவ்வொரு செயலும் இஸ்லாம் விரும்பும் சமூக அமைப்பின் பலவித அங்கங்களை சித்தரிக்கும் விதத்தில் அமைந்துள்ளன.
தொடர்பின்றி தூரத்தில் உள்ள நாடுகளினதும் பிராந்தியங்களினதும் மக்கள் அறிவுகளையும் சாதனைகளையும் பரிமாறிக் கொள்ளுதல், தகவல்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளல், தத்தமது நிலைமைகள் பற்றி விசாரித்து தெரிந்து கொள்ளல், தப்பெண்ணங்களை ஒதுக்கித் தள்ளி இதயங்களை இணைத்துக் கொள்ளல், பொது எதிரிகளை முகம் கொள்ளும் விதத்தில் தமது சக்தியை மேம்படுத்திக் கொள்ளல் போன்றன ஹஜ்ஜில் கிடைக்கும் அரிய பெரிய அடைவுகளாகும். இது போன்ற வேறு சாதாரண சனத் திரள்கள் நூற்றுக் கணக்கில் கூடினாலும் இவ்வாறு அடைந்து கொள்ள முடியாது.
பராஅத் எனப்படும் [முஷ்ரிகீன்களில் இருந்து விலகிக் கொள்ளும் பிரகடனம்] கிரியையின் அர்த்தம், எந்தக் காலத்தையும் சேர்ந்த அடக்குமுறையாளர்களின் எல்லாவித கொடூரம், அடக்குமுறை, குழப்பம், அநியாயம் என்பவற்றை மறுதலித்து எக்காலத்தையும் சேர்ந்த அகந்தை கொண்டோரின் அடக்குமுறைக்கும் அநியாயத்துக்கும் எதிராக எழுந்து நிற்பதாகும். இது ஹஜ்ஜின் பிரமாண்டமான ஓர் ஆசீர்வாதமாகும். ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயங்களுக்கு சிறந்த சந்தர்ப்பமும் ஆகும்.
இன்று, அமெரிக்காவை முதன்மையாகக் கொண்டுள்ள அகங்கார அடக்குமுறையாளர்களின் இணைவைப்பினதும் [ஷிர்க்] இறை மறுப்பினதும் [குப்ர்] கூட்டணியில் இருந்து தம்மை விளக்கிக் கொள்வது ஒடுக்கப்பட்ட மக்கள் படுகொலை செய்யப் படுவதையும் அவர்கள் மீது போர் தொடுப்பதையும் மறுப்பதாகும். ஐ எஸ் ஐ எஸ் மற்றும் அமெரிக்காவின் ப்ளாக் வாட்டர் முதலான பயங்கரவாதத்தின் அடிவேர்களை மறுப்பதாகும். அது சிறுவர்களைக் கொலை செய்கின்ற சியோனிச அரசையும் அதன் ஆதரவாளர்களையும் ஒத்து ஊதுபவர்களையும் எதிர்த்து நிற்பதாகும். மேற்கு ஆசியா மற்றும் வடஆபிரிக்க கேந்திர முக்கியத்தும் வாய்ந்த பிராந்தியங்களில் போர் மூட்டத் துடிக்கும் அமரிக்கா மற்றும் அதன் தோழமை சக்திகளையும் கண்டிப்பதற்கு சமனாகும். அந்த சக்திகள் மக்களின் மீது எல்லையில்லாத துன்பங்களையும் வேதனைகளையும் கட்டவிழ்த்துள்ளதுடன் நாளாந்தம் புதிய தொல்லைகளையும் முடுக்கி விடுகின்றன. அதன் அர்த்தம், இனவாதம் மற்றும் புவியியல், சாதியம், மேனியின் நிறம் போன்றவற்றின் அடிப்படையிலான அனைத்து வித பாரபட்சங்களையும் மறுதலித்தல் ஆகும். இஸ்லாம் ஒவ்வொருவருக்கும் சிபார்சு செய்துள்ள கண்ணியமுள்ள, நீதியான, உயரிய நடைமுறைகளுக்கு எதிரான ஆக்கிரமிப்புத்தன்மை கொண்ட மற்றும் மக்கள் அல்லலில் மகிழ்வுறுகின்ற சக்திகளின் குரூரம் நிறைந்த நடத்தைகளை மறுதலித்தல் ஆகும். இப்ராஹீமிய ஹஜ்ஜின் பயன்களில் சில இவையாகும். நமக்கு தூய இஸ்லாமின் அழைப்பும் இதுவாகும். இது இஸ்லாமிய சமுதாயத்தின் முக்கியமான இலட்சியங்களின் தோற்றப்பாடுமாகும்.
ஹஜ்ஜின் நெறிப்படுத்தலில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் இந்த மாபெரும் அர்த்தம் செறிந்த காட்சி ஆண்டு தோறும் நிறைவேற்றப்படுகின்றது. இது போன்றதொரு சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கு உழைக்குமாறு அனைவரையும்அழகிய மொழியில் அழைக்கிறது,
இஸ்லாமிய சமுதாயத்தின் பொறுப்புள்ள முக்கியஸ்தர்கள் கனதியான, பாரதூரமான ஒரு பொறுப்பை தமது தோள்களில் சுமந்துள்ளார்கள். அவர்களில் பலர் தற்போது ஹஜ்ஜில் கலந்து கொண்டும் உள்ளார்கள். இந்தப் பாடங்கள் அவர்களது விடா முயற்சியாலும் விவேகத்தாலும் சமூக மயப்படுத்தப்பட்டு பொது அபிப்பிராயத்துக்கு இட்டுச் செல்லப்பட வேண்டும். சிந்தனைகள், அபிலாசைகள், அனுபவங்கள், தகவல்கள் என்பனவற்றின் ஆன்மீக ரீதியான பரிமாற்றம் அவர்களின் கைகளினால் செயல் வடிவம் பெற வேண்டும்.
இன்றைய முஸ்லிம் உலகின் முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்று தான் பாலஸ்தீன் பற்றிய பிரச்சினை. எந்த மத்ஹபை எந்த இனத்தைச் சேர்ந்தவராயினும் முஸ்லிம்களின் தலையாய அரசியல் பிரச்சினையாக முன்னே நிற்பது இது தான். அண்மைய நூற்றாண்டுகளின் மிகப் பெரிய அக்கிரமம் பலஸ்தீனில் நிகழ்ந்திருக்கிறது. வேதனை நிறைந்த இந்த நிகழ்ச்சிக் கோவையில் ஒரு தேசத்தின் வாழ் நிலம், வீடு, விளை நிலம், வருமானம், கண்ணியம், சுய அடையாளம் என அனைத்துமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மக்கள் துவண்டு போகாமல் துணிந்து நின்று நாளுக்கு நாள் மென்மேலும் வலுப் பெற்று களத்தில் நின்று போராடுகிறார்கள். இவர்கள் சிறந்த பெறுபேறுகளை அடைந்து கொள்வதற்கு எல்லா முஸ்லிம்களினதும் ஒத்தாசை அவர்களுக்குத் தேவை.
‘நூற்றாண்டின் உடன்பாடு’ எனும் சதித் திட்டக்குரிய பின்புலம் அநியாயக்கார அமரிக்கா மற்றும் அதன் சதிகார தோழமைகளாலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது பலஸ்தீன் மக்கள் மீது மட்டும் அன்றி முழு மக்கள் இனத்தின் மீதுமான பாதகச் செயலாகும். எதிரிகளின் இந்த சூழ்ச்சியை முறியடிப்பதற்கு அனைவரும் காத்திரமாக பங்களிக்க வேண்டுமென நாம் அழைப்பு விடுக்கிறோம். இறைவனின் நாட்டத்தாலும் வலுவாலும் இதுவும் உலக வல்லூறுகளின் ஏனைய சதித் திட்டங்களும் எதிர்த்தெழும் முன்னணியின் விசுவாசம் மற்றும் உறுதி என்பவற்றின் எதிரில் படு தோல்வியையே தழுவிக் கொள்ளும்.
இறைவாக்கு இவ்வாறு உள்ளது: ‘அவர்கள் சதி செய்ய விரும்புகிறார்களா? உண்மையில் இறை மறுப்பாளர்கள் தான் சதி செய்கிறார்கள்.’
வெற்றியும் கருணையும் தேகரோக்கியமும் பெறவும் வணக்க வழிபாடுகள் அங்கீகரிக்கப்படவும் கண்ணியமிக்க எல்லா ஹாஜிகளுக்கும் நான் பிரார்த்திக்கிறேன்.
செய்யித் அலீ காமெனெயி
.................................................
End/ 257