AhlulBayt News Agency

source : ABA24
Saturday

2 September 2017

7:02:19 PM
852054

The message of Imam Khamenei to the world Muslims on 2017 Hajj pilgrimage in TAMIL Language (தமிழ்)

The message of Imam Khamenei to the world Muslims on 2017 Hajj pilgrimage in TAMIL Language (தமிழ்).

(AhlulBayt News Agency) - 

The message of Imam Khamenei to the world Muslims on 2017 Hajj pilgrimage in TAMIL Language (தமிழ்:

______________________________________________

இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் மாண்பு மிகு ஆயத்துல்லாஹ் செய்யித் அலீ காமெனயி விடுத்துள்ள
ஹஜ் செய்தி
அளவற்ற அருளானும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயர் போற்றி.

பிரபஞ்சங்களைப் பரிபாலிக்கும் பெரியோனாம் அல்லாஹ்வைப் போற்றுகிறேன். அவனது திருத் தூதர் மீதும் அவரது பரிசுத்த குடும்பத்தினர் மற்றும் புனித தோழர்கள் மீதும் இறைவன் ஆசீர்வாதம் புரிவானாக.

மீண்டும் ஒரு ஹஜ்ஜில் ஒன்று கூடுவதற்கும் அருள் நிறைந்த அந்த ஆன்மீகச் சுனையில் ஆசுவாசம் பெறவும் பல லட்சம் யாத்திரிகர்களுக்கு வரம் தந்த இறையோனைப் போற்றிப் புகழ்கிறேன். இரவு பகலாக இறையில்லத்தில் தரித்திருந்து பணிவடக்கத்துடனும் பக்திப் பரவசத்துடனும் தியானித்து வழிபடும் அரிய பாக்கியத்தை அவர்கள் பெற்றுள்ளார்கள். அதன் ஒவ்வொரு கணப் பொழுதும் உள்ளங்களைப் புடம் போட்டு ஒளியேற்றி அழகு படுத்தும் அற்புத நிவாரணியாகும்.

ஆன்மீக அகமியங்கள் நிறையப் பெற்ற ஆன்மீகப் பயணமே ஹஜ் ஆகும். புனித இறையில்லம் எல்லையற்ற இறையருள் சூழ்ந்த, இறைவனின் அத்தாட்சிகள் நிரம்பியுள்ள ஓர் இடமாகும். ஹஜ்ஜின் மூலம் விசுவாசமுள்ள, பணிவடக்கமும் சிந்தனைத் தெளிவும் கொண்ட ஓர் அடியான் உயரிய ஆன்மீக தராதிரங்களை அடைந்து கொள்கிறான். ஹஜ் மூலமாக அவன் ஒரு உயரிய தேஜஸ் உள்ள மனிதப் புனிதனாய் உருவெடுக்கிறான். அவனை தீட்சண்யமும், வீரமும் செயலாற்றலும் கொண்ட தீரனாக அது மாற்றியமைக்கிறது.

ஆன்மீக மற்றும் அரசியல் ரீதியான எனவும் தனிமனித மற்றும் சமுதாய ரீதியான எனவும் இரட்டைப் பரிமாணங்களை ஹஜ் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இன்றைய இஸ்லாமிய உலகுக்கு இவ்விரண்டும் இன்று தேவைப் படுகின்ற அம்சங்களாகும்.

ஒரு புறத்தில் உலகாயத சக்திகள் தமது மாய தந்திரங்களின் மூலம் நவீன பொறிமுறைகளைப் பயன்படுத்தி அழிவையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. மறு புறத்தில் ஆதிக்க வல்லமை கொண்ட சக்திகளின் கொள்கைகளின் விளைவாக முஸ்லிங்கள் மத்தியில் கலகங்களும் குழப்ப நிலையும் உருவாகி முஸ்லிம் நாடுகளை மோதல்கள் நிறைந்த பாதுகாப்பற்ற நரகபுரிகளாக மாற்றியுள்ளன.
இஸ்லாமிய உலகைப் பீடித்திருக்கும் இவ்விரண்டு வித சோதனைகளில் இருந்தும் விடுபடுவதற்குரிய அதிசிறந்த நிவாரணியாக ஹஜ் திகழுகின்றது. அது அசுத்தங்களில் இருந்து உள்ளங்களைத் தூய்மைப் படுத்துகிறது. தக்வாவினதும் மஅரிபத்தினதும் ஜோதியால் ஒளிமயமாக்குகின்றது. இன்றைய இஸ்லாமிய உலகின் கசப்பான யதார்த்தங்களின் பால் கண்களைத் திறக்கச் செய்கிறது. அவற்றை எதிர்கொள்ளத் தேவையான மனோதிடத்தை வலுப்படுத்துகிறது. எட்டுக்களை ஸ்திரப் படுத்தி செயற்பாடுகளையும் சிந்தனைகளையும் தயார் படுத்துகிறது.  

இஸ்லாமிய உலகு இன்று ஆன்மீக மற்றும் பண்பாட்டு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வீழ்ச்சி கண்டு பாதுகாப்பற்றுக் கிடக்கிறது. நமது அலட்சியமும் எதிரிகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களுமே இதற்கு பிரதான காரணம். இத்தகைய கொடிய எதிரியை முறியடிக்க நாம் நமது சமய ரீதியான, அறிவு ரீதியான கடமையை நிறைவேற்றத் தவறியுள்ளோம். அவர்களுடன் கடுமையாக நடந்து கொள்வது மற்றும் நம் மத்தியில் பரஸ்பரம் அன்பு பாராட்டுவது பற்றிய வழிகாட்டல்களை மறந்து விட்டோம். இதன் விளைவாக இன்றும் இஸ்லாமிய உலக வரைபடத்தின் இதயத்தில் இருந்து கொண்டே சியோனிச எதிரி அமைதியின்மையை உருவாக்கி வருகின்றான். தவிர்க்க முடியாத கடமையான பலஸ்தீனை மீட்பதை லட்சியம் செய்யாமல் சிரியா, ஈராக், யமன், லிபியா, பஹ்ரைன் போன்ற பல இடங்களில் உள்நாட்டு சர்ச்சைகளிலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பயங்கரவாதத்தோடு போராடுவதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம்.

இன்று இஸ்லாமிய நாடுகளின் ஆட்சியாளர்களும் சமய, கலாசார, அரசியல் தலைவர்களும் பாரியதொரு பொறுப்பை தம் புயங்களில் சுமந்திருக்கிறார்கள். ஐக்கியத்தை பலப்படுத்தி, பிரிவினைவாதங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு, வல் லாதிக்கங்கள் மற்றும் சியோனிசம் உள்ளிட்ட எதிரிகளின் சூழ்ச்சிகள் மற்றும் உபாயங்கள் பற்றி சமுதாயங்களை விழிப்பூட்டும் பொறுப்பு, மென் மற்றும் வன் முறைகளில் பல்வேறு தளங்களில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை முறியடிக்கும் போர்முறைகளைக் கற்றுத் தந்து தயார் செய்யும் பொறுப்பு, இஸ்லாமிய உலகில் இன்று நடக்கின்ற, யமன் தேசத்தில் நடந்தேறுவது போன்ற, உலக மக்களின் எதிர்ப்பையும் வெறுப்பையும் ஈட்டித் தந்துள்ள கவலைக்குரிய நிகழ்வுகளை உடனடியாக முன்வந்து முடிவுக்குக் கொண்டுவரும் பொறுப்பு, பர்மாவிலும் ஏனைய இடங்களிளும் அடக்கு முறைக்கும் கொடுமைக்கும் ஆளாகியிருக்கும் முஸ்லிம் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் பொறுப்பு போன்றவையும் அதில் அடங்கும்.

இவை எல்லாவற்றையும் விட, பலஸ்தீனை ஆதரிக்கும், பாதுகாக்கும் பொறுப்பை, சுமார் எழுபது வருட காலமாக ஆக்கிரமிக்கப் பட்டுள்ள தமது பூமியை மீட்பதற்காக போராடி வருகின்ற மக்களுக்கு நிபந்தனையற்ற விதத்தில் ஆதரவும் ஒத்தாசையும் வழங்குகின்ற பொறுப்பைக் கூற வேண்டும்.

இவை நம் அனைவர் மீதும் சுமத்தப் பட்டுள்ள கடமைகள். மக்கள் தமது அரசுகளிடம் இப்பொறுப்பை நிறைவேற்றுமாறு கோர வேண்டும். சமுதாயத் தலைமைகள் இப்பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு இதய சுத்தியுடனும் மனோ வலிமையுடனும் செயலாற்ற வேண்டும். இத்தகைய முன்னெடுப்புகள் இறைவனது மார்க்கத்துக்கு நாம் நிறைவேற்றும் கடமைகளாகும். இது வாக்களிக்கப் பட்டுள்ள பிரகாரம் இறையாதரவையும் தன்னகத்தே கொண்டதாகும்.  

இது ஹஜ்ஜின் சில படிப்பினைகளாகும். இவற்றை நாம் விளங்கி செயலாற்ற முடியும் என்று நம்புகின்றேன்.  

உங்கள் அனைவரதும் ஹஜ் அன்கீகரிக்கப் பட வேண்டுமென யாசிக்கிறேன். ஹரம் ஷரீபிலும் மினாவிலும் உயிரிழந்தவர்களையும் நினைவு படுத்துகிறேன். அவர்களின் அந்தஸ்துகளை உயர்த்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.

உங்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் பொழியட்டும்.

செய்யித் அலீ காமெனயி
துல் ஹஜ் 07, 1438

..............................
End/ 101